×

உடுமலை, மடத்துக்குளத்தில் தொடரும் வறட்சி தென்னை மரங்கள் வெட்டி அழிப்பு

உடுமலை, ஜூன் 25: உடுமலை, மடத்துகுளம் வட்டாரங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னை விவசாயிகள் மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிஏபி பாசனம், அமராவதி பாசனம், திருமூர்த்தி அணை பாசனப்பகுதிகளில் அதிகளவு விவசாயிகள் தென்னை பயிரிட்டிருந்தனர்.கடந்த ஆண்டு பருவமழை நல்லமுறையில் பெய்ததால் அமராவதி, ஆழியார், திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் மள, மளவென அதிகரித்து பாசனத் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தட்டுப்பாடில்லாத நிலை நீடித்தது. ஆனால் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. அணைகளில் நீர்மட்டம் சரிந்ததோடு, நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தண்ணீர் பஞ்சம் காரணமாக தென்னை, கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்கள் கருகத் துவங்கின. உடுமலை, மடத்துகுளம் வட்டாரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டிருந்தனர். கடந்த ஆண்டு இளநீர், தேங்காய், கொப்பரை, தேங்காய் எண்ணெய் என தென்னை சம்பந்தப்பட்ட அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் நல்ல விலை கிடைத்து வந்தது. குறிப்பாக இளநீர் ஒன்று ரூ.30 வரை விலை உயர்ந்தது. இதே போல தேங்காய் குறைந்த பட்சம் அளவை பொறுத்து ரூ.15 முதல் விற்பனையானது. கொப்பரையும் கிலோ ரூ.100 முதல் விலை அதிகரித்தது.  இந்நிலையில் கடந்த 6 மாதமாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தென்னைக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. சொட்டு நீர் பாசனம் கைகொடுக்காத நிலையில், லாரி தண்ணீர் விலைக்கு வாங்கி வந்து தென்னையை காப்பாற்றிய போதும், மரங்களில் காய்ப்புத் திறன் குறைந்தது. நோய் தாக்குதல், பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னை மரங்களின் காய்ப்புத்திறன் பாதிக்கப்பட்டது.

மேலும் தோப்புகளை பராமரிக்கும் செலவும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. உரங்களின் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. சமீப காலமாக உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் சாமுராயபட்டி, கொழுமம், வாளவாடி, கணியூர், காரத்தொழுவு, தளி, திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தென்னைகளை வெட்டி அகற்றி வருகின்றனர்.நோய் தாக்குதல் காரணமாக மொட்டை மரமாக காட்சி அளிக்கின்ற தோட்டத்தை காண முடியாமல் விவசாயிகள் அவற்றை வெட்டி செங்கல் சூளை மற்றும் ஓடு போடும் தோட்டத்து சாலைகளுக்கு கைமரங்களாக விற்று வருகின்றனர்.வறட்சி எதிரொலியாக தொடர்ந்து தென்னைகளை வெட்டி விற்று வருவதால் தென்னை சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்து கொண்டே வருகிறது. உடுமலை நகருக்கு அருகே உள்ள சில தோப்புகளில் மரங்கள் வெட்டப்பட்டு அவரை வீட்டுமனைகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 6 மாத காலத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தென்னைகள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மரங்கள் வெட்டிய பகுதிகளில் ஒரு சிலரே மீண்டும் காய்கறி பயிரிட்டுள்ளனர். பெரும்பாலோனோர் வீட்டுமனைகளாக பிரித்துள்ளனர். இதுகுறித்து தென்னை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘காய்ப்பு திறன் குறைந்த மரங்களை பாதுகாக்க ஆண்டுதோறும் அதிக அளவு செலவிடுவதை தவிர்க்கவே வெட்டப்படுகிறது. வறட்சி காரணமாக லாரி தண்ணீர் வாங்கி  தென்னையை பாதுகாக்க முடிவதில்லை. மாற்று பயிர் சாகுபடி செய்யவும் தண்ணீர் தேவை அவசியம். ஒவ்வொரு ஆண்டும் வறட்சியின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே தான் மரங்களை வெட்டி விட்டு விளைநிலத்தை வெறும் காடாக போட்டு வைத்து வருகின்றனர்,’’ என்றார்.

Tags : Udumalai ,Madathukulam ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு