நடவடிக்கை இல்லாததால் அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படும் அவலம்

குலசேகரம், ஜூன் 19: பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன் சுகாதார கேடுகளும் ஏற்படுகிறது. ஆறுகள், குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், நீர்நிலைகள் அழிவை நோக்கி செல்கின்றன.  இதனால் இயற்கை மற்றும் இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றதையடுத்து தமிழக அரசு கடந்த ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டதிலிருந்து சிலநாட்கள் அதிகாரிகள் நடத்திய ரெய்டு, அபரதம் விதிப்பு காரணமாக மக்காத பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு குறைந்திருந்தது.  பின்னர் தேர்தல் களம் சூடுபிடித்ததால் பிளாஸ்டிக் மீதான நடவடிக்கைகள் இல்லாததால் மீண்டும் தாராளமாக புழங்க துவங்கியது. பல இடங்களில் நடவடிக்கைக்கு பயந்து பூட்டப்பட்ட தயாரிப்பு கூடங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின.

 இதனால் வணிகநிறுவனங்கள் முதல் விழாக்கள் நடைபெறும் இடங்கள் வரை பிளாஸ்டிக் பயன்படுத்துதல் அதிகரித்தது. விழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் கொடி, தோரணங்களாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் இதனை கண்டும் காணாமல் உள்ளனர். பிளாஸ்டிக் ரெய்டுக்கு அதிகாரிகள் செல்லும் போது சில இடங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாட்சிகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
இந்த பகுதிகளில் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் சோதனை செய்யும் போது ஏன் இங்கு மட்டும் சோதனை செய்கிறீர்கள் என வியாபாரிகள் வாக்குவாதம் செய்கின்றனர். இது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. வேர்கிளம்பி சந்திப்பில் வேர்கிளம்பி, கோதநல்லூர் போன்ற பேரூராட்சியும் கண்ணனூர் ஊராட்சியும் சந்திக்கிறது. அழகியமண்டபம் சந்திப்பில் விலவூர், திருவிதாங்கோடு பேரூராட்சிகளும் காட்டாத்துறை ஊராட்சியும் சந்திக்கிறது.
இது போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தயங்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழல்களால் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது முழுமையடையாமல்உள்ளது.

தெருக்களில் குவியும் குப்பைகள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் உள்ளாட்சி அமைப்பினர் அதிலுள்ள மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் சாலையோரங்களில் போட்டு தீ வைத்து கொளுத்துகின்றனர்.
ஆற்றூர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு கள் திருவட்டார் பாலத்தின் அடியில் பரளியாற்றின் கரையில் கொட்டப்படுகிறது. ஊராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணிபுரிபவர்களும் பிளாஸ்டிக் கழிவுகளை வீடுகளிலிருந்து பெற்று சாலையோரம் தீ வைத்து எரிக்கின்றனர்.  பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு இதற்கும் உரிய வழிகாட்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

திற்பரப்பில் மாற்று  பொருட்கள் கண்காட்சி
திற்பரப்பு பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு மாற்றாக கரும்பு கழிவு, மக்காச்சோளம் போன்றவை மூலம் தயார் செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள், கப் போன்றவைகளை பார்த்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக அலுவலகத்தின் வெளியே காட்சிக்கு வைத்துள்ளனர்.


Tags :
× RELATED கால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்