தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது, சடலத்தை ஆற்றில் புதைத்த கள்ளக்காதலனும் சிக்கினார்: வாலாஜாவில் கள்ளக்காதலுக்கு இடையூறால் பயங்கரம்

வாலாஜா, ஜூன் 19: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கள்ளக்காதலுடன் சேர்ந்து பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து கொலை செய்து, உடலை ஆற்றில் புதைத்து நாடகமாடினார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாயை கைது செய்தனர். கள்ளக்காதலனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், சிப்காட் வ.உ.சி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(30) மேஸ்திரி. இவருக்கும் வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்த காவ்யா(25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து இவர்களுக்கு தருண்(4) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறில் காவ்யா, கணவரை பிரிந்து குழந்தையுடன் வெளியேறி வாலாஜா, பெல்லியப்பா நகர், திருவள்ளுவர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். மேலும், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தருண் யுகேஜி படித்து வந்தான்.அப்போது, காவ்யாவிற்கும், ராணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்த தியாகராஜன்(30) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் தியாகராஜன் காவ்யா வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்தார். தியாகராஜன் மக்கள் தேசம் என்ற கட்சி நகர செயலாளராகவும் உள்ளார்.

இதையறிந்த, ராமச்சந்திரன் காவ்யாவிடம் சென்று ‘நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள், எனது மகனை என்னிடம் கொடுத்துவிடு’ என அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால், காவ்யா, குழந்தையை தர மறுத்தாராம்.இந்நிலையில், கடந்த 13ம் தேதி காவ்யாவிற்கும், கள்ளக்காதலன் தியாகராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், ராமச்சந்திரன் அடிக்கடி வந்து தகராறு செய்வது குறித்தும், குழந்தை தருண் குறித்தும் கள்ளக்காதலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து குழந்தை தருணை, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர், பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தனர். தொடர்ந்து அன்றிரவு 2 மணியளவில் இருவரும் சேர்ந்து குழந்தையின் சடலத்தை ஆற்காடு டெல்லிகேட் அருகே உள்ள பாலாற்றில் புதைத்தனர்.இதையடுத்து, மறுநாள் காலை காவ்யா ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு வந்த காவ்யாவின் அக்கா அஜந்தா, குழந்தை தருண் குறித்து கேட்டார். அதற்கு, காவ்யா முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.இதனால், சந்தேகமடைந்த அஜந்தா காவ்யாவிடம் மீண்டும் மீண்டும் குழந்தை குறித்து விசாரித்ததால், குழந்தையை கொன்று புதைத்ததை அஜந்தாவிடம் கூறினார். இதுகுறித்து, அஜந்தா கடந்த 15ம் தேதி ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, அவர்கள் வாலாஜா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் காவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தியாகராஜனுடன் சேர்ந்து குழந்தை தருணை கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர், குழந்தையை புதைத்த இடத்தை போலீசாரிடம் காவ்யா அடையாளம் காட்டினார். இதுகுறித்து, தகவலறிந்த ஆற்காடு தாசில்தார் வத்சலா மற்றும் ராணிப்பேட்டை டிஎஸ்பி கலையரசன் முன்னிலையில் நேற்று அரசு மருத்துவர்கள் தருணின் சடலத்தை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.மேலும், வழக்குப்பதிந்து காவ்யாவை நேற்று கைது செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் தியாகராஜனையும் நேற்று பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, பெற்ற தாயே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : river ,
× RELATED ஆண் சடலம் மீட்பு