போதக்காடு அடர்ந்த வனப்பகுதியில் பச்சை மூங்கில் வெட்டி கடத்தல்

சேலம், ஜூன் 7: சேலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட போதக்காடு அடர்ந்த வனத்தில் பச்சை மூங்கில் வெட்டி கடத்தப்படுவதாக மலைக்கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் வன மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன் மலையில் காட்டுத்தீ பரவலை தவிர்க்க காய்ந்த மூங்கில்களை வெட்டி அகற்ற டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தநபர், இக்காடுகளில் காய்ந்த மூங்கில் மரங்களை வெட்டி, லாரிகளில் ஏற்றிச்செல்கிறார். இந்நிலையில், சேலம் ஏற்காடு மலையின் பின்பகுதியாக விளங்கும் போதக்காட்டில் பச்சை மூங்கில்கள் டன் கணக்கில் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதனை போதக்காடு மலை கிராம மக்கள், தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சேலம்-அரூர் ரோட்டில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் இருந்து காட்டிற்குள் 15 கிலோ மீட்டர் தொலைவில் போதக்காடு உள்ளது. அந்த மலை கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் அடர்ந்த மூங்கில் காடு இருக்கிறது. அங்கு தீ பரவலை தடுக்க காய்ந்த மூங்கில்களை வெட்டி அகற்ற டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருக்கும் பச்சை மூங்கில்களை வெட்டி, லாரிகளில் 500க்கும் அதிகமான லோடு எடுத்துச் சென்றதாக மலைகிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர் பியூஸ் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். பின்னர் பியூஸ் மானூஸ், சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில், காய்ந்த மூங்கிலை வெட்டி அகற்றுவதாக கூறிவிட்டு, டெண்டர் எடுத்த நபர், பச்சை மூங்கில்களை வெட்டி கடத்தியுள்ளார். அதிலும், அடர்ந்த காட்டிற்குள் பொக்லைன் இயந்திரம் மூலம் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி பாதை அமைத்து, பச்சை மூங்கில் வெட்டிக் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனிமேல் பச்சை மூங்கில்களை வெட்டுவதை தடுக்க வேண்டும், எனக்கூறியுள்ளார்.

இந்த பச்சை மூங்கில் வெட்டப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதனால், அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: