×

தேனியில் வென்ற மகனுக்கு மகுடம் சூட்டுவாரா துணை முதல்வர்? முழு ஒத்துழைப்பு வழங்கிய ஓபிஎஸ்சுக்கு இணக்கம் காட்டுமா பாஜ?

தேனி, மே 25:  தேனி தொகுதியில் போராடி வெற்றி பெற்றுள்ள மகனுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மத்தியில் மகுடம் சூட்டுவாரா என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. தங்களது நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஓபிஎஸ்சுக்கு பாஜ தலைமை இணக்கம் காட்டுமா என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடம் இருக்கிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக, கூட்டணி 37 தொகுதிகளை அள்ளிச் சென்றது. தேனி தொகுதியில் மட்டும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி அதிமுக தரப்பு மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த போது, அங்கு தனது மனைவி, மகன்கள், மருமகள்களுடன் பன்னீர்செல்வம் சென்று இரண்டு நாள் தங்கியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷாவும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இரண்டு நாளில் அவர்களுடன் ஓபிஎஸ் குடும்பத்தினர் நெருங்கி பழகியதாக அதிமுகவினர்் கூறுகின்றனர். தவிர ரவீந்திரநாத்குமார், பாஜ தலைவர் அமித்ஷாவின் மகனுடன் ரொம்பவே நட்பாகி விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம், தனது மகன் வெற்றி பெற்றதும் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்துள்ளார். இந்த கோரிக்கையினை அமித்ஷா மறுக்கவில்லை என தேனி மாவட்ட அதிமுகவினர் கூறுகின்றனர். ரவீந்திரநாத்குமார் தனக்கு நெருக்கமான சிலரிடம் ‛தான் வெற்றி பெற்றால் மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் பற்றிய முழு விவரங்களையும் மத்திய உளவுப்போலீசார் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது: திமுக அசுர பலத்துடன் எழுந்துள்ள நிலையில், பாஜவின் முழு ஆதரவு இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும். அதேபோல் அதிமுகவுடன் தொடர்ந்து நல்லுறவு இருந்தால் மட்டுமே பாஜ அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள முடியும். எனவே திமுகவின் அசுர வளர்ச்சி இரு கட்சிகளுக்கும் கடும் நெருக்கடியினை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாஜ தமிழகத்தில் கட்சியை வளர்க்க அக்கட்சியின் தமிழக பாஜக தலைவர்களில் ஒருவருக்கு முக்கிய துறையில் கேபினட் அந்தஸ்தில் மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளது. அதேபோல் கூட்டணியை தக்க வைக்க துணை முதல்வர் மகனுக்கு ஏதாவது ஒரு துறையில் துணை அமைச்சர் அல்லது இணை அமைச்சர் பதவியாவது வழங்க வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தனர்.


Tags : OBS ,
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி