×

அதியமான்கோட்டை அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

தர்மபுரி, மே 25: தர்மபுரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வேனை சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா, அதியமான்கோட்டை அருகே தோக்கம்பட்டியில், தனியார் நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும், தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என அதியமான்கோட்டை காவல் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவும் கொடுத்தனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி செல்போன் டவர் அமைப்பதற்காக, தரை தளம் கட்டுமான பணிக்காக சென்ற சிமென்ட் கலவை வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

மேலும், வெண்ணாம்பட்டி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதியமான்கோட்டை போலீசார் சமரசம் செய்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று சிமென்ட் தூண் அமைக்க தேவையான தளவாட சாமான்களுடன் கட்டுமான ஊழியர்கள் மினி வேனில் தோக்கம்பட்டிக்கு சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு சென்று வேனை சிறைபிடித்தனர். மேலும், செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து வேனை மீட்டு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், ‘தோக்கம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கடந்த 6ம் தேதி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம்.

அப்போது, அதிகாரிகள் தரப்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெறாது என தெரிவித்தனர். ஆனால், எங்களது எதிர்ப்பையும் மீறி செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். செல்போன் டவர் அமைக்க மீண்டும் முயற்சி செய்தால், எங்களின் போராட்டம் தீவிரமாக நடக்கும்,’ என்றனர்.

Tags : Citizen ,protest ,cell phone tower ,Adiyamanankottai ,
× RELATED ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது...