×

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த சம்பவம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது:இளைய மகளுக்கு தீவிர சிகிச்சை

பெரணமல்லூர், மே 25: பெரணமல்லூர் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. உயிர் தப்பிய மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த இமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனு(32). இவரது மனைவி விஜயலட்சுமி(27). மகள்கள் திவ்யதர்ஷினி(12), பிரியதர்ஷினி(10), மகன் ரித்திக் ரோஷன்(3). இந்நிலையில், சீனு தனது மனைவி விஜயலட்சுமி பெயரில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ₹8 லட்சம் கடன் பெற்று, மினிலாரி ஒன்றை வாங்கினார், ஆனால் சீனு கடந்த 4 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லையாம். இதனால், கடந்த 20ம் தேதி அவரது வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், தவணைத்தொகையை கட்டும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனு மறுநாள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து தானும் குடித்தார்.
பின்னர், மயங்கிய நிலையில் இருந்த அவர்களை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே விஜயலட்சுமி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு குழந்தை ரித்திக் ரோஷனும் இறந்தான். இந்நிலையில் திவ்யதர்ஷினி கடந்த 22ம் தேதி காலை இறந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சீனுவும் நேற்று காலை இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. அவரது மகள் பிரியதர்ஷினி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : victims ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...