×

கன்னியாகுமரி மக்களவை தொகுதியை 23 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய காங்கிரஸ்

நாகர்கோவில், மே 24:  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் 23 ஆண்டு களுக்கு பிறகு கன்னியா குமரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி என்ற பெயருடன் இருந்தபோது பாரம்பரியமாக காங்கிரஸ் வசமே இருந்து வந்தது. 1951ம் ஆண்டு மார்ஷல் நேசமணி இங்கு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1957ல் தாணுலிங்க நாடார், 1962ல் மார்ஷல் நேசமணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். 1969ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1971ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு காமராஜர் வெற்றிபெற்றார். 1977ல் குமரி அனந்தன் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980, 1984, 1989, 1991ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டென்னிஸ் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
 
தொடர்ந்து காங்கிரஸ் உடைந்து தமாகா கட்சிஉதயமான நிலையில் அப்போதும் 1996, 1998 ஆகிய தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட்டு மீண்டும் டென்னிஸ் வெற்றி பெற்றார். நீண்ட காலம் டென்னிஸ் நாகர்கோவில் மக்களவை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் முதல் முதலாக பா.ஜ நாகர்கோவில் மக்களவை தொகுதியை கைப்பற்றியது.அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.

தொடர்ந்து 2004ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு பெல்லார்மின் எம்.பி ஆனார். 2008ம் ஆண்டு தொகுதிகள் மறு சீரமைப்புக்கு பின்னர் நாகர்கோவில் மக்களவை தொகுதி கன்னியாகுமரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுவரை திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியுடன் மக்களவை தேர்தலில் இணைந்து இருந்த கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதன் பிறகு நாகர்கோவில் மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. குமரி மாவட்ட மக்கள் முழுவதும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்களவை பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்றனர். அதன்பிறகு 2009ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு ஹெலன் டேவிட்சன் வெற்றிபெற்றார்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றிபெற்றார். 1991ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்த போதிலும் 1996ம் ஆண்டு முதல் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்ற முடியவில்லை.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார். இந்த முறை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார். இதன் வாயிலாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் வசம் சென்றுள்ளது.

Tags : Congress ,constituency ,Kanyakumari Lok Sabha ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...