கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கிருஷ்ணகிரி, மே 23:  கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் 1ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, சிலம்பம், குத்துச்சண்டை மற்றும் வாலிபால் ஆகிய போட்டிகளுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, தினசரி பயிற்சியின் போது பால் மற்றும் முட்டை இலவசமாக வழங்கப்பட்டது. முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி டிஎஸ்பி பாஸ்கர் பங்கேற்று, பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘விளையாட்டு என்பது ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும். தற்போது உயர்ந்த பதவிகளில் இருப்போர் கண்டிப்பாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களே. விளையாட்டால் உடல் மட்டுமின்றி மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. விளையாட்டால் படிப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. எக்காரணம் கொண்டும் மனிதர்களை அழிக்க வந்துள்ள செல்போனில் விளையாடாதீர்கள். விளையாட்டு மைதானத்தில் வந்து விளையாடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்,’ என்றார். வாலிபால் பயிற்றுநர் அற்புதராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: