×

சித்தூர் மாவட்டத்தில் 14 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிக்கு இன்று 2 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

* காலை 8 மணிக்கு தொடங்குகிறது

* 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு


சித்தூர், மே 23: சித்தூர் மாவட்டத்தில் 14 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிக்கு இன்று காலை 8 மணிக்கு 2 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 14 சட்டப்பேரவை தொகுதிகளும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 50 நாட்களுக்கு பிறகு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குறது.
இதற்காக சித்தூர் மாவட்டத்தில் 2 எஸ்பிக்கள் தலைமையில் 2 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சித்தூர் அடுத்த முருக்கம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சித்தூர் மக்களவை தொகுதி மற்றும் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆர்விஎஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ராஜம்பேட்டை மக்களவை தொகுதி மற்றும் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக இரண்டு தனியார் கல்லூரி அருகே 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் வழியாக வரும் லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் யாரும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.
அதேபோல் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. நோடல் அதிகாரிக்கு மட்டுமே செல்போன் எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளே செல்லும்போது பேனா, பேப்பர், செல்போன் போன்றவற்றை உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது.

மேலும் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது முதல் சுற்றில் எத்தனை வாக்குகள் எந்த கட்சி பெற்றது என தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் தகவல் பலகையில் பதிவு செய்வார்கள். அதை பார்த்து பொதுமக்கள் எந்தெந்த கட்சி வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் பதிவானது என தெரிந்து கொள்ளலாம். இதற்காக மிக பெரிய பிரமாண்டமான டிஜிட்டல் தொலைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணும் மையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. ஏஜென்டுகள் அமரக்கூடிய நாற்காலி, டேபிள் போன்றவையும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 87 ஆயிரத்து 33 பேர் வாக்களித்துள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 83 ஆயிரத்து 375 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 3 ஆயிரத்து 606 பேரும் உள்ளனர்.

சித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதிக்கு 20 மேசைகள் ஒதுக்கப்பட்டு 16 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதுபோல் நகரி தொகுதியல் 16 சுற்றுகளும், கங்காதரநல்லூரில் 16 சுற்றுகளும், சித்தூருக்கு 15 சுற்றுகளும், புங்கனூருக்கு 17 சுற்றுகளும், பலமனேருக்கு 19 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. சித்தூர் ஆர்விஎஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தம்பலபல்லிக்கு 14 மேசைகளும் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. பீலேர் 18 சுற்றுகளும், மதனபல்லி 12 சுற்றுகளும், திருப்பதி 18 சுற்றுகளும், காளஹஸ்தி 19 சுற்றுகளும், சத்தியவேடு 19 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Tags : Chittoor district ,constituencies ,Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது..!!