சென்னை விமான நிலையத்தில் 13 லட்சம் தங்கம் பறிமுதல்: இலங்கை பெண் பயணி உள்பட 2 பேர் சிக்கினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து வந்த 2 விமானங்களில் ₹13 லட்சம்  மதிப்புடைய தங்க கட்டிகளை கடத்தி வந்த இலங்கை பெண் பயணி உள்பட 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மதுரையை சேர்ந்த வசந்த்ஜெயராஜ் (26) என்பவர், சுற்றுலா பயணி விசாவில் சார்ஜாவிற்கு சென்று, திரும்பி வந்தார். அவரது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. அவர் புதிதாக ஸ்பீக்கர் மற்றும் ஹேர் டிரையர் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தார். அவைகளை பிரித்து பார்த்த போது அவற்றில் 250 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ₹8 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

இதேபோல், நேற்று காலை 8.35 மணிக்கு லங்கன் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த பாத்திமா (43) என்ற பயணி சென்னைக்கு வந்திருந்தார்.  அவரது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத பெண் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவரது உள்ளாடைக்குள் 150 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு ₹5 லட்சம். அவரையும் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: