பழவேற்காடு ஏரியில் சவாரி சென்றபோது படகுகள் மோதி விபத்து: நீரில் மூழ்கி பெண் பலி: படகோட்டிக்கு வலை

சென்னை, மே 14: பழவேற்காடு ஏரியில் சவாரி சென்றபோது படகுகள் ஒன்றோடு ஒன்று  மோதி கவிழ்ந்தது. இதில், சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்தார். சென்னை அடுத்த பழவேற்காடு பகுதியில் ஏரியும், கடலும் கலக்கும் முகத்துவாரம் சுற்றுலாப் பகுதியாக திகழ்கிறது. இங்குள்ள கலங்கரை விளக்கம், நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த டச்சு கல்லறை தோட்டம், மகிமை மாதா ஆலயம் உள்பட பல்வேறு பகுதிகளை கண்டுகளிக்க தினமும் திருவள்ளூர், சென்னை, ஆந்திரா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

Advertising
Advertising

கடந்த 2011ம் ஆண்டு பழவேற்காடு ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு ஏரியில் படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையும் மீறி சிலர், சுற்றுலாவுக்கு வருபவர்களை இயற்கை அழகை கண்டுகளிக்கும் வகையில் படகுகளில் ஏற்றிச்செல்கின்றனர். அவர்களிடம் கூடுதலாக பணமும் வசூல் செய்யப்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை எனக்கூறப்படுகிறது.

இந்தநிலையில்,  சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மேரிஜானி உள்பட 10 பேர் நேற்று முன்தினம் பழவேற்காடு வந்தனர். பின்னர் அவர்கள் படகு ஒன்றில் முகத்துவார பகுதிக்கு சென்றனர். அங்குள்ள இயற்கை அழகை ரசித்துவிட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது  அவர்களது படகும் எதிரே வந்த மற்றொரு படகும் திடீர் என மோதியது.

இதில் மேரிஜானி பயணித்த படகு நிலை குலைந்து கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் படகோட்டி நீச்சலடித்து கரைக்கு வந்து தப்பி ஓடினார். தண்ணீரில் மூழ்கியவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அனைவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மேரி ஜானி இறந்தார்.

தகவலறிந்து திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மேரிஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கு காரணமாக படகோட்டியை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பழவேற்காடு வரும் சுற்றுலா பயணிகளை சிலர் படகு சவாரிக்கு அழைத்து செல்கின்றனர்.

அவ்வாறு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும், பணத்துக்கு ஆசைப்பட்டும் கடல் மற்றும் ஏரிக்குள் அழைத்து செல்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டில் அலட்சியம் காட்டும் போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: