×

மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அண்ணாமலையார் கோயில் குளங்களில் கலெக்டர், எஸ்பி ஆய்வு தண்ணீரை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவு

திருவண்ணாமலை, ஏப்.26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் தொடர்பாக, கலெக்டர், எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். குளத்து நீர் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம்(குளம்), 5ம் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து பராமரிக்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரண்டு குளங்களிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அதனால், குளங்களில் துர்நாற்றம் வீசியது. எனவே, பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். தொடர்ந்து, இரண்டு குளங்களிலும் செத்து மிதந்த மீன்களை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், கோயில் ஊழியர்கள் அகற்றினர். ஆனாலும், குளங்களில் வீசும் துர்நாற்றம் குறையவில்லை.

இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி ஆகியோர் நேற்று தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், இரண்டு குளங்களில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் உள்ள தண்ணீரை நான்கு கேன்களில் அடைத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் கூறுகையில், `லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் அண்ணாமலையார் கோயிலை முறையாக பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும், அறநிலையத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.

திருவண்ணாமலையில் அதிகபட்சமான வெயில் சுட்டெரிக்கிறது. எனவே, குளத்தின் தண்ணீரில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றம் காரணமாக அல்லது தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
எனவே, இரண்டு குளங்களின் தண்ணீரும் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. தண்ணீரில் மாசு அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி சரி செய்யப்படும். குளத்தை முழுமையாக சீரமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்' என்றார்.அப்போது, ஆர்டிஓ தேவி, டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் அக்பர், கோயில் ஆய்வாளர் தேவராஜ், மணியக்காரர் செந்தில் உடனிருந்தனர்.


Tags : Collector ,killing ,Annamalaiyar ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...