சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் காலாவதியான பிஸ்கெட், குளிர்பானம் பறிமுதல்

சேலம், ஏப்.26:  சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காலாவதியான பிஸ்கெட், குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டது. ேசலம் புதிய பஸ் ஸ்டாண்ட், கடைவீதிகள், குகை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில கடைகளில் போலி குளிர்பானம், காலாவதியான  பாக்கெட் மோர், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, கலெக்டர் ரோகிணி உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், 14 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 7 குழுவாக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, பஸ் ஸ்டாண்டில் உள்ள 58 ஓட்டல்கள், கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில், காலாவதியான பிஸ்கெட்டுகள், சிப்ஸ் என 16.280 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

காலாவதியான குளிர் பானம் 6 லிட்டரும், சரியான லேபிள் இல்லாத உணவு பொருட்கள் 66.95 கிலோவும், குளிர்பானங்கள் 11.75 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதை விற்ற 13 கடை விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளில் இருந்து, 5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேபோல், 180 கிராம் பான்மசாலா, குட்காவும் சோதனையில் சிக்கியது. இது தவிர, உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வணிகம் செய்த 2பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ‘விதிமுறைகளை மீறி செயல்பட்டால், அந்த கடைகள் மீது வழக்குகள் தொடரப்படும். இந்த ஆய்வு சேலத்தின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்படும். தொடர் கண்காணிப்பில் அலுவலர்கள் ஈடுபடுவார்கள்,’ என்றார்.

Related Stories: