அரசியல் கட்சி முகவர்கள் 24மணி நேர கண்காணிப்பு

சேலம், ஏப்.25: சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை, வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் ரோகிணி தெரிவித்தார். தமிழக நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. சேலம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே,  தேர்தல் விழிப்புணர்வுக்காகவும், பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று திருவள்ளூரில் உள்ள மாநில கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ரோகிணி தலைமையில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் 330 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 330 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 314 விவிபாட் இயந்திரங்கள்  திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து கலெக்டர் ரோகிணி கூறுகையில், ‘‘சேலம் தொகுதிக்குட்பட்ட ஓமலூர், இடைப்பாடி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும்  வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணிநேரமும் இதனை கண்காணிக்கலாம்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்புறம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவின் மூலம், கீழ்தளத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி டிவி வாயிலாக 24 மணிநேரமும் பார்க்கவும், அங்கேயே தங்கி கண்காணிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறை அமைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணுவதற்கு14 மேசைகள் போடப்படுகிறது. அதுபோல  பதிவான வாக்குகளை விவிபேட் இயந்திரத்தில் சரிபார்க்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

அப்போது, டிஆர்ஓ திவாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், தேர்தல் தாசில்தார் திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர். இதனையடுத்து கருப்பூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்ற கலெக்டர் ரோகிணி, ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்போது, மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, கூடுதல் துணை கமிஷனர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: