×

விவசாயிகள் அதிக லாபம்பெற கோடை உழவு செய்யலாம்

சின்னசேலம், ஏப். 24:  சின்னசேலம் வட்டார விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெற கோடை உழவு கட்டாயம் செய்ய வேண்டுமென வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து சின்னசேலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன்  கூறியிருப்பதாவது: கோடை உழவு கோடி நன்மை தரும் என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்த நிலத்தை தரிசாக போடாமல் சட்டி கலப்பையை கொண்டு உழவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான ராபி பருவத்தில் பலவகையான பயிர்களை சாகுபடி செய்து அறுவடை செய்கிறோம். அதன் பிறகு தரிசாக இருக்கும் நிலங்களை ஆழமாக கோடை உழவு செய்வதன் மூலம் மேல்மண் கீழ்மண்ணாகவும், கீழ்மண் மேல் மண்ணாகவும் புரட்டி போடப்படுகிறது. இதனால் விவசாய நிலத்தில் மண்ணின் இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம், நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. மேலும் களைகள் அழிக்கப்படுவதோடு அவையே மட்கி மண்ணுக்கு உரமாகி வளம் சேர்க்கிறது. இவ்வாறு செய்வதால் சாகுபடி செய்யும் பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் கோடை உழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாவதற்கு காரணமான பூசனங்களும், பூசனவித்துகளும் அழிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களையும், குறிப்பாக மக்காச்சோள பயிரை தாக்கும் படை புழுக்களும் கோடை உழவின்மலம் செலவின்றி அழிக்கப்படுகிறது. ஆகையால் விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிப்பதுடன், கூட்டுப்புழுக்களை அழிக்கவும் கட்டாயம் கோடை உழவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை