×

மாநகர், மாவட்டத்தில் 4 மாதத்தில் 33பேர் குண்டாசில் கைது

சேலம், ஏப்.24: கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்து, போலீசார் சிறை வைத்து வருகின்றனர். இதன்படி சேலம் மாநகர போலீசில், ஆண்டுக்கு 100 பேர் வரையில் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்படுகின்றனர். மாவட்ட போலீசில் சுமார் 70 பேர் குண்டாசில் கைதாகிறார்கள். தொடர் குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கையை போலீஸ் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.நடப்பாண்டு கடந்த 4 மாதத்தில் சேலம் மாநகர போலீசில் 16 ரவுடிகள் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மிக முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை இவ்வாறு சிறையில் அடைத்துள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் பிறப்பித்துள்ளார். இதேபோல், சேலம் மாவட்ட போலீசில் கடந்த 4 மாதத்தில் ரவுடியிஷத்தில் ஈடுபட்டு வந்த 15 பேரும், கள்ளச்சாராயம் விற்று வந்த 2 பேரும் என 17 பேரை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் சிறை வைத்துள்ளனர். மேட்டூரை சேர்ந்த பிரபல ரவுடியான ரகு மற்றும் காரிப்பட்டி, வாழப்பாடி பகுதியை கலக்கிய ரவுடிக்கும்பல் என 15 முக்கிய ரவுடிகள் குண்டாசில் கைதாகியுள்ளனர். மாவட்ட எஸ்பி தீபா கனிக்கர் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் ரோகிணி இத்தகையை நடவடிக்கையை எடுத்துள்ளார்.  இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடர் குற்றங்களை தடுக்க குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சட்டத்தின் கீழ் ரவுடிகள், கள்ளச்சாராயம் விற்போர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சேலம் மாநகர், மாவட்ட போலீசில் இதுவரையில் 33 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...