×

வெட்டுவெந்நியில் பரபரப்பு பயணிகள் நிழலகம் பணிகள் தடுத்து நிறுத்தம்

மார்த்தாண்டம், ஏப். 24: மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ₹220 கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு, தற்போது வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பாலத்தின் கீழ் பகுதி சாலையில் முக்கிய சந்திப்புகளில், குறிப்பாக ஏற்கனவே செயல்பட்டு வந்த பஸ் நிறுத்தம் பகுதிகளில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.இதையடுத்து வெட்டுவெந்நியில் தற்போது பயணிகள் நிழலகம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதேவேளை வெட்டுெவந்நி சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம் சாலை பிரிந்து செல்லும் இடம் திடீர் வளைவு மற்றும் பள்ளமான பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதேப்ேபான்று விபத்துக்களுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.எனவே வெட்டுவெந்நி தேங்காப்பட்டணம் சாலையில் நகராட்சி வணிக வளாகத்தின் கீழ் பகுதியில் பாதுகாப்பாக நிழலகம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேற்று நிலழகம் அமைப்பதற்கான தளம் உறுதிபடுத்தும் பணி நடந்தது. இதற்காக ராட்சத வாகனத்தில் காங்கிரீட் கலவை தயார் செய்து ெகாண்டு வரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங் தலைமையில், குழித்துறை நகர காங். தலைவர் அருள்ராஜ், மாவட்ட ெசயலாளர் ரீகன், ராபிக் உள்ளிட்டோர் சம்பவ இடம் வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் ராஜமாணிக்கம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், காவல் துறை ஒப்புதல் பெற்றுதான் இந்த இடத்தில் நிழலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. வணிக வளாகப்பகுதிக்கு கொண்டு செல்லதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.அதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள், அபாயகரமான வளைவு பகுதியில் நிழலகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவில் சற்று தள்ளி வணிகவளாகத்தின் கீழ் பகுதியில் நிழலகம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கான்கிரீட் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளை இதே இடத்தில் பணிகள் தொடர்ந்து நடந்தால் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...