புழல், எம்ஜிஆர். நகர், 4வது தெருவை சேர்ந்தவர்

புழல்: புழல், எம்ஜிஆர். நகர், 4வது தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் (45), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு புழல் சைக்கிள் ஷாப், ஜிஎன்டி சாலையை கடக்க முயன்றபோது மூலக்கடையில் இருந்து புழல் நோக்கி வேகமாக சென்ற பைக், பாலசுந்தரம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பாலசுந்தரத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர். புழல் போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புழல் சைக்கிள் ஷாப்பில் இருந்து மத்திய சிறைச்சாலை வரையுள்ள ஜிஎன்டி சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர். 

‘‘மின்விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், பைக் ஓட்டி  வந்து விபத்தை ஏற்படுத்திய அப்பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25) என்பவரை  கைது செய்தனர்.

Related Stories: