×

வீடு, வீடாக அதிகாரிகள் ஆய்வு குமரியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம் மே 15 வரை நடக்கிறது

நாகர்கோவில், ஏப். 23: குமரி மாவட்டத்தில் நேற்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. அடுத்த மாதம் 15ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கிறது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 14 வயதுடைய இடைநின்ற அல்லது பள்ளி செல்லா குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு நேற்று (22ம் தேதி) தொடங்கியது. இந்த ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய இரு திட்டங்கள் இணைந்து சமக்ர சிக்ஷா என செயல்படுவதால் இந்த கணக்கெடுப்பில் தற்போது 18 வயது வரையிலான பள்ளி செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த கணக்கெடுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மேற்பார்வையில் 115 அலுவலர்கள் நேற்று ெதாடங்கினர். இவர்களில் 70 பேர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆவர். 45 பேர் சிறப்பாசிரியர்கள் ஆவர். உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபானி, ஷீஜா, ராஜன், ரவிக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நாகர்கோவிலில் பறக்கின்கால், டி.வி.டி. காலனி, ராஜாக்கமங்கலம், இறச்சக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தினர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கணக்ெகடுப்பு நடத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற கணக்கெடுப்பு மூலம் 439 குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக் கருத வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட கணக்கெடுப்பில் 131 குழந்தைகள் 30 வேலை நாட்களுக்கும் அதிகமாக பள்ளிகளுக்கு வரவில்லை என்பது கண்டறியப்பட்டது. இவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று இருப்பார்களா? அல்லது படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார்களா? என்பது கண்டறியப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதே போல் 15, 16, 17 வயது நிரம்பியவர்கள் எட்டாம் வகுப்பு முடிக்காமல் இருந்தால் அவர்களையும் உடனடியாக படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். தனி தேர்வர்களாக இவர்கள் கற்பிக்கப்பட்டு 10, 12ம் வகுப்பு பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மே 15ம்தேதி வரை இந்த கணக்கெடுப்பு நடக்கிறது.


Tags : inspection ,school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி