×

மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு மீனவர்கள் கோரிக்கை

நாகர்கோவில், ஏப். 23: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வசதியாக, அடுத்த மாதம் நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம்தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 23ம் தேதி நடக்கிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 69.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இத் தொகுதியில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களில் 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் வாக்களித்துள்ளனர். கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 73.97 சதவீத வாக்குகள் பதிவாகின. நாகர்கோவில் தொகுதியில் 67.18 சதவீதம், குளச்சல் தொகுதியில் 69.12 சதவீதம், பத்மநாபபுரம் தொகுதியில் 72.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. விளவங்கோடு தொகுதியில் 68.21 சதவீதமும், கிள்ளியூர் தொகுதியில் 67.78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

மக்களவை தொகுதி முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 51 ஆயிரத்து 77 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 69.80 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு வந்ததற்கு அதிகாரிகளின் குளறுபடிகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டு உள்ளனர். கடலோர பகுதிகளான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக புகார் கூறப்படுகிறது. வாக்குப்பதிவு தினத்தன்று பல்வேறு மீனவ கிராமங்களில் போராட்டங்களும் நடந்தன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அதிக வாக்குகள் பெறும் பகுதிகளை குறி வைத்து வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக சமூக அமைப்புகள், மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சிறப்பு குழு நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பினரும் புகார் மனு அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். இதே போல் மக்கள் பாதை என்ற அமைப்பினர் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களில், கடந்த 18ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாத நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்கு மறுக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன், ஒரு நாளை குறிப்பிட்டு உரிய பாதுகாப்போடு வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறி உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் ஜனாதிபதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிடோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. சுமார் 40 ஆயிரம் பேர், அதுவும் கடற்கரை கிராமங்களில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறும் விவகாரம்  விஸ்வரூப நிலையை எட்டி உள்ளது.

இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் கூறுகையில், நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள 48 கடலோர கிராமங்கள் மற்றும் 68 உள்நாட்டு மீனவ கிராமங்களிலும் 37 ஆயிரத்து 581 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். தூத்தூர், இணையம், கடியப்பட்டணம் போன்ற ஊர்களில், ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா 1000 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். மற்ற கடற்கரை கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் 500, 600, 700 என்ற விகிதாச்சாரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எந்த உதவியும் செய்யாததை மனதில் வைத்து மீனவ கிராமங்களில் வாக்களிக்க இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர்களை திருடி உள்ளனர். மக்களிடம் இருந்து வாக்களிக்கும் உரிமையை பறித்தது ஜனநாயக படுகொலை ஆகும். இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன், கடற்கரை கிராமங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை மே 23ல் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் கூறுகையில், இதுநாள் வரை இந்த அளவுக்கு மீனவர்களின் வாக்குகள் தகர்க்கப்படவில்லை. குறிப்பாக இளம் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். மதவாத கட்சிகளுக்கு எதிராக வாக்குகள் பதிவாகாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எங்களிடம் இருந்து திருடிய வாக்குகளை திரும்ப தர வேண்டும் என மீனவ கிராம மக்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார்.


Tags : Fishermen ,election commission ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...