×

வெப்பத்தை தணித்த கோடைமழை

ஆண்டிபட்டி, ஏப்.23: ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கோடை மழையினால் வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை கால வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதளவு பாதிப்படைந்து வந்தது. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என பலர் கோடை வெப்பத்தினால் மிகவும் அவதியடைந்து வந்தனர். குறிப்பாக கடந்த வாரம் வேலூரில் 106 டிகிரி வெப்பநிலை பதிவானது. 2019ம் ஆண்டின் அதிக வெப்பமான நாளாக கருதப்படுகிறது. மேலும் கரூர், பரமத்தியில் 105 டிகிரி, மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணி ஆகிய பகுதிகளில் 104 டிகிரியும் வெயில் பதிவானது. இதனிடையே சென்னை வானிலை மையம் கோடை வெப்பத்தினால் மழை பெய்யும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டியை சுற்றி இருக்கும் ஒரு சில பகுதிகள் கனமழையும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை மழை தொடர்ந்து நன்றாக பெய்ய வேண்டி கிராமப்புறங்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் கோடை விவசாயத்திற்கு கை கொடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு