×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய 4 அடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலை, ஏப்.21: திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் மற்றும் போலீசார் அடங்கிய 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய 2 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களில் உள்ள இருட்டறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் ‘இருட்டறையை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று பார்வையிட்டார். அப்போது, மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடம் முழுவதும் 100 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆரணி மக்களவை தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையமான சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...