சென்னையில் உள்ள 3754 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார்: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

சென்னை: சென்னையில் உள்ள 4 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்ட பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள ெமாத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 66. இதில் ஆண்கள் 19 லட்சத்து 5 ஆயிரத்து 216 பேர். பெண்கள் 19 லட்சத்து 59 ஆயிரத்து 862 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 988 பேர். சென்னையில் 3754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 333 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. 157 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. வாக்குப்பதிவிற்காக  மொத்தம் 9529 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இவற்றில் பழுது ஏற்படும்போது உடனடியாக மாற்றுவதற்கு வசதியாக கூடுதலாக 2098 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

யாருக்கு வாக்கு அளித்தோம் என்பது உறுதி செய்யும் 4058 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றில் பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவதற்கு 1341 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் மொத்தம் 20 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு தொடங்குகிறது முன்பாக அனைத்து வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அதன்படி பெரம்பூர் தொகுதியில் காலை 5.30 மணிக்கும், 3 நாடாளுமன்ற தொகுதியில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கும். இது முடிந்தவுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்கள் டோக்கன் வழங்கப்படும். அவர்கள் அனைவரும் வாக்களித்த பின்புதான் வாக்குப்பதிவை நிறைவு செய்யப்படும். சென்னை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் மாநில காவல் துறையினர் ஈடுபடுத்தபட உள்ளனர். இதை தவிர்த்து, 5 கம்பெனி துணை ராணுவம் மற்றும் 2 கம்பெனி ஆந்திர மாநில சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபத்தபட உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு  

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். வட சென்னை மற்றும் பெரம்பூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் லயோலோ கல்லூரியிலும், தென் தென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு துணை ராணுவம் மற்றும் மாநகர போலீசார் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்  

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க  தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 913 இடங்களில்  சக்கர  நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும்  முதியோர்களுக்கு உதவி செய்ய என்எஸ்எஸ், என்சிசி, செஞ்சிலுவை சங்கம்  உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: