பறக்கும் படையினர் சோதனையில் 8 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்: ஆலந்தூர் அருகே பரபரப்பு

சென்னை :  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர்  பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன்படி, ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணி தலைமையில் பரங்கிமலை கத்திப்பாரா மேம்பாலம் அருகே அதிகாரிகள் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த தனியார் பார்சல் சர்வீஸ் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் குவியல் குவியலாக தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவற்றை கொண்டு வந்த   செந்தில்அதிபன் என்பவரிடம் விசாரித்த போது, பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட தங்க நகைகளை  விமானம் மூலம் சென்னைக்கு வந்து, சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக  தெரிவித்தார். ஆனால் இந்த தங்க நகைகள் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ₹8 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து பரங்கிமலை போலீஸ்  இன்ஸ்பெக்டர் வளர்மதி உதவியுடன் ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: