×

செங்கம் அருகே பரபரப்பு தாயின் மடியில் இருந்த 9 மாத குழந்தை பஸ் ஜன்னல் வழியாக தவறி விழுந்தது மருத்துவமனையில் சிகிச்சை


செங்கம், மார்ச் 26: அரசு பஸ்சில் தாயின் மடியில் இருந்த 9 மாத கைக்குழந்தை ஜன்னல் வழியாக கீழே தவறி விழுந்தது. குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா(30). இவரது கணவர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சத்தியபிரியா(9 மாதம்) என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில், சரண்யா நேற்றுமுன்தினம் பெங்களூரில் உள்ள கணவரை பார்க்க திருக்கோவிலூரில் இருந்து பெங்களூருக்கு அரசு பஸ்சில் குழந்தை சத்தியபிரியாவுடன் சென்றார். ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து பயணம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாச்சல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9.30 மணியளவில் பஸ் வந்தது. அப்போது சாலையில் விபத்துக்களை தடுக்க இருபுறமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் வழியாக பஸ் வளைந்து கடந்து சென்றது.

அப்போது, சரண்யாவின் மடியிலிருந்த குழந்தை திடீரென தவறி ஜன்னல் வழியாக ெவளியில் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா அலறி கூச்சலிட்டார். இதையடுத்து, பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர், கீழே இறங்கி ஓடிச்சென்ற சரண்யா, துடி, துடித்து அலறிக்கொண்ட கிடந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சில் இருந்து தவறி விழுந்த போது அங்கு கிடந்த மணலில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக சிறு காயமின்றி உயிர் தப்பியது. உள்காயம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : hospital ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...