×

சாலையின் நடுவே தானியங்களை உலர வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருக்கோவிலூர், மார்ச் 22: திருக்கோவிலூர் பகுதியில் பிரதான நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த நெல், எள், கேழ்வரகு, கம்பு, உளுந்து, பனிப்பயிர் போன்ற தானியங்களை உலர்த்து
கின்றனர். அனைத்து கிராமங்களிலும் தானிய உலர்களம் அமைத்த போதிலும் தங்கள் விளைநிலத்திற்கு அருகாமையில் உள்ள சாலைகளை தான் உலர்களமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கேழ்வரகு, உளுந்து, பனிப்பயிர் ஆகியவற்றை உலர்த்தும் போது வழுக்கும் தன்மை கொண்ட இவற்றால் இலகு ரக வாகனம் முதல் கனரக வாகனம் வரை விபத்துக்குள்ளாகிறது. இதனால் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் படுகாயம் அடைவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும், வாகன சேதமும் ஏற்படுகிறது. தானியங்களை சாலையில் நின்று கொண்டு உலர்த்தும் விவசாயிகளும் விபத்துகளில் சிக்குகின்றனர். விவசாயிகள் மீது எங்கே நடவடிக்கை எடுப்பது என்று போலீசாரும், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதில் அபாயகரமான வளைவுகள் கொண்ட திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் தான் அதிகம் நடைபெறுகிறது. அவ்வாறு சாலையில் தானியங்களை உலர்த்தும் விவசாயிகள், சாலையின் ஏதாவது ஒருபுறம் ஓரமாக உலர்த்தினால் கூட இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

அதைவிடுத்து சாலையின் நடுவேதான் அறுவடை செய்த தானியங்களை உலர்த்தி வருவதால் தொடர் விபத்து ஏற்பட்டு வருவதுடன் அதன்மூலம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் வாகனத்தில் செல்பவர்களுக்கு மாசு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தானியங்களை உலர்த்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வாகன
ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,motorists ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி