சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தேர்தலுக்கு இடைக்கால தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளையை தற்போது  ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் இடைக்காலமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட இருந்தது. இதை எதிர்த்து அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் எல்.செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர். தற்போது 1144 உறுப்பினர்கள் மட்டுமே  உள்ளதாக கூறி தேர்தல் நடத்த முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 5ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவு வெளிவருவதற்கு முன்பே தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டதால், உத்தரவை மாற்றக்கோரி நீதிபதியிடம் மனுதாரர் செங்குட்டுவன் முறையிட்டார். இவ்வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கமலநாதன், ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அறக்கட்டளைக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தின் உத்தரவு நாளில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் நிர்வாகி கடிதம் அனுப்பியுள்ளார். எனவே பச்சையப்பன் அறக்கட்டளையின் ேதர்தல் தொடர்பான மார்ச் 6ம் தேதி  அறிவிப்பு மீது அடுத்த உத்தரவு வரும்வரை எந்த நடவடிக்கையும் அறக்கட்டளை நிர்வாகி மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

Related Stories: