×

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

வேலூர், மார்ச் 21: மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளுக்கு மாநிலத்தில் இந்த ஆட்சி விழுந்து விடும் என்று வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் அறிமுக கூட்டம், வேலூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் ராணிப்பேட்டை காந்தி, வேலூர் கார்த்திகேயன் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை அறிமுகப்படுத்தி திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:

கதிர்ஆனந்த் சென்னையில் படித்து அமெரிக்காவில் எம்பிஏ பட்டம் பெற்றார். அங்கு 1.5 லட்சம் டாலர் தருகிறேன் என்றார்கள். ஆனால் அதை ஒதுக்கிவிட்டு கூழே குடித்தாலும் ஊரில்தான் இருப்பேன் என்று வந்து விட்டார். அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால், அந்த ஆர்வத்தை ஊட்டிவிட்டவர் ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திதான். அவர்தான், இவரிடம், நீ பார்லிமென்டில் இருக்க வேண்டிய ஆள் என்று சொல்லி ஒரு வழி ஆக்கிவிட்டார். எனது மகன் நன்கு ஆங்கிலம் பேசுவார். பார்லிமென்டில் ஆங்கிலத்தில், இந்தியில் பேச வேண்டும். எனக்கு தெரிந்து பார்லிமென்டில் இங்கிருந்து சென்றவர்களில் ஜி.விசுவநாதனுக்கு பிறகு யாரும் பேசவில்லை. கதிர்ஆனந்த் ஆங்கிலத்தில் மணிக்கணக்கில் பேசக்கூடிய திறமை பெற்றவர். அதைவிட கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.

நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால்தான் ஒரே தொகுதியில் 10 முறை நின்று வெற்றிபெற்றுள்ளேன். அதேபோல் கதிர்ஆனந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். அவர் இங்கு பல வாக்குறுதிகளை தந்தார். நானும் சில வாக்குறுதிகளை அவரது சார்பில் தருகிறேன். வேலூர் கோட்டை மைதானம் இன்று அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இவர் வெற்றிபெற்றால் பழையபடி கோட்டை மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன். வேலூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பேலஸ் சிக்னல் அருகே அண்டர்கிரவுண்ட் அமைக்கப்படும். சென்னை-வேலூர் இடையே எலக்ட்ரிக் ரயில் விடப்படும். மாநகராட்சியில் தற்போது வரியை உயர்த்தியுள்ளனர். நான் சொல்கிறேன். தேர்தல் முடிந்தவுடன் கதிர்ஆனந்த் டெல்லிக்கு செல்வார். அங்கு ராகுல் பிரதமராக அமர்ந்தவுடன், ஒரே வாரத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவார். அடுத்த நொடியே வரி உயர்வு ரத்து செய்யப்படும்.

தேர்தல் முடிவு வந்த 24 மணி நேரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். அந்த வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். அது எனக்கு கைவந்த கலை. ஓபிஎஸ்சை பார்த்து நான், ‘நீங்கள் முதல்வராக இருங்கள்’ என்று கூறினேன். அடுத்த நொடி கட்சி 2 ஆக உடைந்தது. ஒருவர் சீட்டுக்காக எங்களிடமும், அவர்களிடமும் பேசினார். அதை போட்டு உடைத்தேன். அதனால் அங்கு இப்போது 4 சீட்டுடன் அவர்கள் கதை முடிந்தது. அதுபோல் 18 தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் நமது ஆட்சி வரும். 30 எம்எல்ஏக்கள் அப்போது இடம்மாறி வந்து உட்காருவார்கள். அந்த ஆற்றல் எனக்கு உண்டு. ஆகவே, வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதியிலும் அதிகமாக வாக்குகளை பெற்று தர வேண்டும். குறிப்பாக வேலூரில் அதிக வாக்குகள் பெற வேண்டும். எந்த சட்டப்பேரவை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தருகிறீர்களோ, அந்த தொகுதிக்கு ₹50 லட்சம் நான் தருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேட்பாளர் கதிர்ஆனந்த் பேசும்போது, ‘20 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆகவே உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த மாவட்டத்தை சேர்ந்தவன். உங்கள் அனைத்து பிரச்னைகளும் தெரியும். வேலூர் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும். வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும். வியாபாரிகளை பொறுத்தவரை காய்கறிகள், பழங்கள், பூக்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதி கூறுகிறேன்’ என்றார். கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Vellore Lok Sabha ,Duramurugan ,constituency ,DMK ,meeting ,candidate ,
× RELATED ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால்