வாலிபர் சாவுக்கு காரணமான போலி சாமியார் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 20:  கிருஷ்ணகிரியில், வாலிபர் சாவுக்கு காரணமான போலி சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடக  மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் டான்(50). இவர், கிருஷ்ணகிரி அருகே சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெரு பகுதியில் குறி சொல்வது, மாந்தரீகம்  செய்வது, மந்திரங்கள் போடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். பகலில்  டெய்லராகவும், இரவில் சாமியாராகவும் இருந்து வந்தார். கடந்த 10ம் தேதி  இரவு அமாவாசையன்று தனது வீட்டில் யாகம் வளர்த்து பூஜை செய்துள்ளார்.  அந்த  நெருப்பை சரியாக அணைக்காமல் வெளியில் சென்றதால், தீ பரவி வீட்டில் இருந்த  காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில், தீயை அணைக்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன்(28)  என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். அவரது சாவுக்கு காரணமான போலி சாமியார் டானை கைது  செய்யக்கோரி, கடந்த 17ம் தேதி இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சாமியாரின் வீட்டையும் சூறையாடினர். அப்போது, அங்கு  மாந்தரீகத்திற்கு பயன்படுத்திய சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும்  கைத்துப்பாக்கி இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார், வீட்டில் கிடந்த  கைத்துப்பாக்கியை மீட்டுச்சென்றனர். மேலும், இது தொடர்பாக தலைமறைவாக  இருந்த சாமியார் டானை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, சேலம் மத்திய  சிறையில் அடைத்தனர். 

Related Stories: