×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி அதிகாரிகளுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை, மார்ச் 20: தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படையினரின் நடமாட்டத்தை கண்காணிக்க, வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடந்தது.மக்களவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, கட்டுப்பாட்டு அறைகள், வாகன சோதனைக்கு தணிக்கை சாவடிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், பறக்கும் படையில் பணியாற்றும் அதிகாரிகளை கண்காணிக்க வசதியாக, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம், எந்த இடத்திற்கு செல்கிறது, எங்கே நின்றிருக்கிறது என்ற விபரங்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பறக்கும் படை குழுக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் 8 மணி நேரம் என்ற அடிப்படையில் மூன்று சுழற்சிகளில் பணியாற்றுகின்றனர். இப்பணியில் 8 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல், நிலை கண்காணிப்பு குழுவிலும் 8 வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.எனவே, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு பணியில் ஈடுபடுத்தப்படும் 16 வாகனங்களிலும் நேற்று ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.மேலும், பறக்கும் படை என்ற பெயரில் மோசடி ஆசாமிகள் வாகன சோதனை நடத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க ேதர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரியின் பெயர், முகவரி, பதவி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடையாள அட்டையில் இடம் பெறும். தேர்தல் நடத்தும் அலுவலரின் கையெழுத்துடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், போலீசார், கார் டிரைவர், வீடியோ கிராபர், மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மேலும், அதிகாரிகளின் வாகனத்தில் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு புகார் செய்யலாம்.


Tags : GPS equipment officers ,Tiruvannamalai district ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...