×

பழனி பங்குனி உத்திர திருவிழா கொடுமுடி வழியாக ரேக்ளா வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம்

கொடுமுடி, மார்ச் 19: பழனி பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்க கொடுமுடி வழியாக  பல்வேறு வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம்  பழனியில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 21ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க பழனி செல்லும் வழியில் நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு  நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், பஸ்கள், லாரிகள், கார்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இப்படி வந்திருந்த பக்தர்களில் பழனியை அடுத்த பாப்பம்பட்டி, காவலபட்டி, நெய்காரபட்டி, ஆண்டிப்பட்டி, சின்னகாஞ்சிபுரம், புளியம்பட்டி, ஆகிய ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று முன்தினம்   நள்ளிரவு முதல் கொடுமுடிக்கு வர துவங்கிய பக்தர்கள் காவிரியில்  நீராடினர். பின்னர் தாங்கள் கொண்டுவந்திருந்த தீர்த்தகலசங்களில் காவிரி  தீர்த்தத்தை நிரப்பிக்கொண்டும், காவடியை எடுத்துக்கொண்டும் கொடுமுடியில்  உள்ள மகுடேஸ்வரர்கோயிலில் வழிபாடு நடத்தினர்.

பின்னர் பழனி செல்லத்துவங்கினர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது ‘வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழாவன்று எங்கள் முன்னோர்கள் பழனிக்கு கால்நடையாக செல்வது வழக்கம். பங்குனி உத்திரத்துக்கு முதல் மூன்று நாட்கள் எங்கள் முன்னோர்கள் கால்நடையாக கொடுமுடிக்கு வந்து காவிரி தீர்த்தம் எடுத்துக்கொண்டு அடுத்த நான்கு தினங்களில் பழனியை அடைந்து திருவிழா அன்று தாங்கள் கொண்டு சென்ற தீர்த்தத்தை பழனிமுருகனுக்கு அபிஷேகம் செய்வர். அந்த வழக்கப்படி எங்கள் முன்னோர்களின் வழியில் நாங்களும் தற்போது கால்நடையாக வராமல் நாட்டு இன காளைகள் பூட்டிய ரேக்ளா வண்டிகளில் செல்கிறோம், என்றனர். இப்படி நேற்று மட்டும் அதிகாலை முதல் மாலை 5 மணி வரை  ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடிக்கு வந்திருந்தனர்.இவர்களைப்போல கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து கார்களில் வந்திருந்த பக்தர்களும் காவிரி தீர்த்தத்தை கலசங்களில் நிரப்பிக்கொண்டு பழனியை நோக்கி சென்றனர்.

Tags : pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்