×

நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஜாதி, மதம் பேதமின்றி வந்து செல்வார்கள். இவ்வாறு சிறப்பு வாய்ந்த நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் 467வது கந்தூரி விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மதியம் புனிதக்கொடிகள் நாகப்பட்டினம் மீரா பள்ளிவாசல் வந்தடைந்தது. அங்கு அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் பாத்திஹா ஓதப்பட்டது.

தொடர்ந்து பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் புனிதக்கொடி வைக்கப்பட்டது. பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தை தொடர்ந்து சாம்பிராணி சட்டி ரதம், செட்டிப்பல்லக்கு, டீஸ்டா கப்பல், சின்ன ரதம், போட் மெயில் ஆகிய ரதங்கள் அடுத்தடுத்து அலங்கரிக்கப்பட்டு நின்றது. மீரா பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட இந்த கொடி ஊர்வலம் யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளித்தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.

அங்கிருந்து நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு இரவு வந்தடைந்தது. கொடி ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை சாலைகளில் பொதுமக்கள் நின்று கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். நாகூர் தர்கா அலங்கார வாசல் வந்த கொடிகள் இறக்கப்பட்டு சாஹிப் மினரா, தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிக்கொடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசல் முன்பு அமைந்துள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா, முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களுக்கு கொடிகள் கொண்டு செல்லப்பட்டது.

நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஒதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது நாகூர் தர்கா மின்விளக்குகளில் ஜொலித்தது. விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் வரும் 23ம்தேதி இரவு நடைபெறுகிறது. 24ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 467th Ganduri festival ,Nagore Dargah ,Nagapattinam ,Dargah of the ,Lord ,Nagpur ,India ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்