×

தண்ணீரின்றி சிரமப்படும் தீயணைப்பு படை வீரர்கள்

தர்மபுரி, மார்ச் 19:  தர்மபுரி எஸ்பி அலுவலகம் அருகே தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. தீயை அணைக்கவும், மீட்கவும் 2 பெரிய வாகனமும், ஒரு சிறிய வாகனமும் உள்ளது. 10க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தீயை அணைப்பதற்கு தேவையான தண்ணீரை எடுக்க ஒரு ஆழ்துளை கிணறும், 60 அடியில் ஒரு திறந்தவெளி கிணறும் உள்ளது. கடும் வறட்சியினால் திறந்தவெளி கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. 600 அடி அமைத்த ஆழ்துளை கிணற்றிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை.  இதனால் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தர்மபுரி தீயணைப்பு நிலையத்தில், 3 தீயணைப்பு வாகனத்திலும் தண்ணீர் நிரப்பிய நிலையில் எப்போதும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது தண்ணீர் தட்டுப்பாட்டினால் நகராட்சி மேல்நீர்தேக்க தொட்டியில் நீர் பிடித்து வந்து நிறுத்தும் நிலை உள்ளது. ஏதாவது ஒருவாகனத்தில் மட்டுமே தண்ணீர் நிரப்பி நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது.
தர்மபுரி நகராட்சி நிர்வாகத்திற்கும் சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒகேனக்கல் நீர்தேக்க தொட்டியில், தண்ணீர் பிடித்து தீயை அணைக்கும் நிலைக்கு தீயைணப்பு துறை தள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நீர்தேக்க தொட்டியில் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாத நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.  எனவே தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் இணைப்பு உடனே வழங்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் திறந்தவெளி கிணற்றை தூர்வாரி அதில் போர்வெல் அமைக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையை தீயணைப்பு நிலையம் சமாளிக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Fire fighters ,
× RELATED கராத்தே போட்டி தரகம்பட்டி அருகே...