×

சாதி சான்று வழங்க கோரி ஆர்டிஓ அலுவலகத்தை குரூமன்ஸ் இனத்தினர் முற்றுகை திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, மார்ச் 19: சாதி சான்று வழங்க கோரி திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தை குரூமன்ஸ் இனத்தினர் நேற்று முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்ட குரூமன்ஸ் பழங்குடியினர் நலச்சங்கம் சார்பில், பழங்குடியினர் சாதி சான்று கேட்டு நேற்று ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குருமன்ஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில், சாத்தனூர், வாணாபுரம், கொழுந்தம்பட்டு, தானிப்பாடி, ராயண்டபுரம், வரகூர், மலமஞ்சனூர் புதூர், தண்டராம்பட்டு, உள்ளிட்ட 96 கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் `பழங்குடியினர் சாதி சான்று வழங்க அலைக்கழிக்காதே, வேண்டும், வேண்டும் எங்களுக்கு சாதி சான்று உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து குருமன்ஸ் தலைவர் முருகேசன் கூறுகையில், `எங்கள் இனமக்களுக்கு சாதி சான்று கிடைக்காததால் மிகவும் கஷ்டப்படுகிறோம். குழந்தைகளுக்கு சாதி சான்று இல்லாததால் அரசு உதவிகள் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக சாதி சான்று கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களுடைய ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க உள்ளோம்' என்றார்.தகவலறிந்து வந்த டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் கூறி, அவர்களை சந்திக்க ஆர்டிஓ தேவி மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த பெண்கள், ஆர்டிஓ அறைக்குள் செல்ல முயன்றனர். அப்போது வெளியே வந்த ஆர்டிஓ தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆர்டிஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
(கேப்சன்)திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேசன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட குரூமன்ஸ் சமூகத்தினரிடம் ஆர்டிஓ ஸ்ரீதேவி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : siege ,Thiruvannamalai ,Krumanans ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...