×

திருமணம் செய்வதாக ஏமாற்றி வேறு பெண்ணுடன் நிச்சயம் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

* வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் * அணைக்கட்டு அருகே பரபரப்பு

அணைக்கட்டு, மார்ச் 19: அணைக்கட்டு அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் காதலன் நிச்சயம் செய்ததால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, மூலைகேட் கிராமத்தை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகள் வைஷ்ணவி(18). இவர் வேலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிஎஸ்இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பள்ளி படிக்கும்போது மருதவல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.வைஷ்ணவியும், சுகுமாரும் சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கமலநாதனிடம் சுகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியை பெண் கேட்டனர். அதற்கு அவர் பெண் படித்து கொண்டிருப்பதால் படித்து முடிந்ததும் திருமணம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதற்கு சுகுமாரும் சம்மதம் தெரிவித்தாராம்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் அதிக நேரம் போனில் பேசுவதும், வெளியில் சென்று வருவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு படையில் சுகுமாருக்கு வேலை கிடைத்து சென்றார். அதிலிருந்து சுகுமார் வைஷ்ணவியிடம் சரிவர பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் அவர் சற்று மனவேதனையில் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 11ம் தேதி சுகுமாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் திருணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த தகவலறிந்த வைஷ்ணவி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சுகுமாரிடம் கேட்க பலமுறை போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர் சரிவர பதிலளிக்காமல், வாட்ஸ் அப்பில்லும் சரியாக பதில் தெரிவிக்காமல் தவிர்த்தாராம்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சுகுமாரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தவர், காலை 7 மணியளவில் வீட்டின் பக்கத்தில் இருந்த பூந்தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைஷ்ணவி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.இதைக்கேட்ட அவரது குடுபத்தினர் கதறி அழுதனர். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து, மகள் தற்கொலை காரணமான சுகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமலகண்ணன் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சுகுமாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீரென சடலம் வைத்திருக்கும் சாலையில் வாகனங்கள் நுழையாதவாறு கல்போட்டு தடுத்து அணைக்கட்டு-வேலங்காடு செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : college student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது