×

வேலூர், அரக்கோணம் தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

* கலெக்டர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் * மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வேலூர், மார்ச் 19: வேலூர் மற்றும் அரக்கோணம் மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது.நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுவை என 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.தொடர்ந்து, வரும் 27ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற 29ம் தேதி வரை கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். மேலும், வரும் 23ம் தேதி சனிக்கிழமை மற்றும் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மனுத்தாக்கல் இல்லை. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை மொத்தம் 6 வேலை நாட்களில் மட்டுமே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.வேலூர் மக்களவை ெதாகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் ராமனும், அரக்கோணம் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பார்த்தீபனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது அளிக்க தவறிய ஆவணங்களை, வேட்பு மனு பரிசீலனையின்போது அளிக்கலாம். வேட்பாளர் தெரிவிக்கும் சொத்து விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும், பொதுமக்களின் பார்வைக்காக தகவல் பலகையிலும், தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் வெளியிடப்படும். ஆட்சேபனை இருந்தால், பரிசீலனையின்போது தெரிவிக்கலாம்.இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான வேட்புமனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ராமனிடம் அளிக்கலாம். அதேபோல், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வேட்புமனுக்களை, கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள டிஆர்ஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான டிஆர்ஓ பார்த்தீபனிடம் அளிக்கலாம்.கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால், 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்ஐக்கள், போலீசார் என 300 பேர் கொண்ட மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.மேலும், கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் இருந்து, 100 அடி தூரத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும். வேட்பாளருடன் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை. திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே அனல் பறக்கும் என்று தெரிகிறது.

Tags : Vellore ,constituencies ,Arakkonam ,
× RELATED வாக்களித்தவர்களில் பெண்களே அதிகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில்