×

வேலூர் அருகே கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் அவகாசம் கேட்டு அளித்த கடிதம் தள்ளுபடி

வேலூர், மார்ச் 15: வேலூர் அருகே கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவகாசம் கேட்டு அளித்த தஞ்சாவூர் எஸ்பி கடிதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். வேலூர் அடுத்த சோழவரம் வடக்கு கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது முதல் மனைவி ரங்கநாயகி. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். 2வது மனைவி காந்தம்மாள். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மனைவியின் பேரன் செந்தில்குமாருக்கும், 2வது மனைவி காந்தம்மாளுக்கும்(பாட்டி) சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த காந்தம்மாளிடம், செந்தில்குமார் சொத்து தொடர்பாக மீண்டும் தகராறு செய்து, காந்தம்மாளை கழுத்தறுத்து கொலை செய்தாராம்.

இதுகுறித்து அப்போது வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டராக இருந்த ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தார். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் டிஎஸ்பியாக சென்றார். இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி ராமச்சந்திரனை ஆஜராகும்படி, கடந்த பிப்ரவரி 28, கடந்த 5, 8, 11 ஆகிய தேதிகளில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் டிஎஸ்பி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சாவூர் எஸ்பி மூலமாக டிஎஸ்பி ராமச்சந்திரன், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்த பின்னர் ஆஜராக அனுமதிக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தை நீதிபதி தள்ளுபடி செய்து, வரும் 18ம் தேதிக்குள் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆஜராக வேண்டும் என்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags : DWC ,Vellore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...