×

திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்

* கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு * ஊர்வலத்துக்கு தடை: 5 பேருக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை, மார்ச் 14: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் வரும் 19ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படுகிறது. அதையொட்டி, இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து, வரும் 27ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 29ம் தேதிவரை வேட்புமனுக்கள் வாபஸ் பெறுதலும், அன்று மாலை 5 மணிக்கு, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். மேலும், வரும் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாள் தவிர்த்து, 19ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலான அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம். திருவண்ணாமலை ெதாகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ ரத்தினசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை ₹25 ஆயிரம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினருக்கு 12,500 டெபாசிட் தொகையாகும். ரொக்கமாக அல்லது வங்கி வரைவோலையாக (டிடி) டெபாசிட் தொகையை செலுத்தலாம். காசோலை (செக்) ஏற்பதில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளரை, ஒரு வாக்காளரும், சுயேட்சை வேட்பாளரை, 10 வாக்காளர்களும் முன்மொழிய வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் எந்த பகுதியில் வசிப்பவராகவும் இருக்கலாம். ஆனால், முன்மொழியும் வாக்காளர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
வேட்புமனு தாக்கலின்போது அளிக்க தவறிய ஆவணங்களை, பரிசீலனையின்போது அளிக்கலாம். வேட்பாளர் தெரிவிக்கும் சொத்து விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும், பொதுமக்களின் பார்வைக்காக தகவல் பலகையிலும், தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் வெளியிடப்படும். ஆட்சேபனை இருந்தால், பரிசீலனையின்போது தெரிவிக்கலாம்.

இந்நிலையில், இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதால், இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் நுழைவு வாயிலில் இருந்து, 100 அடி தூரத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும். ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரம், தினமும் மாலை 3 மணிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக தகவல் பலகையில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும். உடனுக்குடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai ,constituencies ,Arani Lok Sabha ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...