தோகைமலை ஆதி பரந்தாடி பெரிய காண்டியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு

தோகைமலை, மார்ச் 6: தோகைமலை அருகே ஆதிபரந்தாடியில் உள்ள பெரியகாண்டியம்மன் மற்றும் கன்னிமார் அம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி திருவிழாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி பரந்தாடியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரிய காண்டியம்மன் மற்றும் கன்னிமார் அம்மன் கோயில்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகாண்டியம்மன், கன்னிமார் அம்மன், மந்திரமகாமுனி, வீரமகாமுனி, செல்லாண்டியம்மன், பேச்சாயி, பொன்னர், சங்கர், தங்காள், மாயவர், வீரபாகுசாம்புகன், சடைமுனி, சின்னமுனி, ஆதிபட்டக்காரர்கள், காரமரம் குடியிருந்த வாக்கு ஸ்தானபதி, சந்தன கருப்பண்ண சுவாமி, கல்காளை வாகனம் ஆகிய தெய்வங்களுக்கு நான்குகால பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக அண்ணன்மார் பொன்னர், சங்கர், மாயவர், தங்காள், வீரபாகுசாம்புகன் ஆகிய தெய்வங்களுக்கு படுகளம் போட்டு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சங்ககவுண்டம்பட்டியிலிருந்து பொன்னர் சங்கர் படுகளம் விழும் பூசாரியாகவும், பாதிரிபட்டியிலிருந்து வீரபாகு சாம்புகன் படுகளம் விழும் பூசாரியாகவும் கலந்து கொண்டனர். வீரபாகுசாம்புகன் படுகளத்திற்கு கோடி போடுதல் நிகழ்ச்சியில் நாகனூர் காலனிக்காரர்கள் கலந்து கொண்டனர். மேலும் மந்திரமகாமுனி மற்றும் வீரமகாமுனிக்கு ஏகவேட்–்டி அணிவித்து பக்தர்கள் நேர்த்திகடன் செய்து வழிபட்டனர். திருவிழாவில் நாகனூர், பாதிரிபட்டி, கழுகூர், சிவாயம், கூடலூர், தோகைமலை உள்பட பல்வேறு ஊராட்சிகளில் இருந்தும் ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் ஆர்டிமலை விராச்சிலேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சின்னரெட்டிபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர் கோயில்களிலும் சிவராத்திரி திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Related Stories: