கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்: சிறுவர் சிறுமியர் ஏமாற்றம்

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டுக்கு உட்பட்ட கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2வது தெருவில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. நடைபாதை, உடற்பயிற்சி கூடம், சிறுவர்களுக்கான ஊஞ்சல்கள், சறுக்கு பாதைகள், இருக்கைகள், மின் விளக்குகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட இந்த பூங்காவை, கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சாவடி தெரு, ஜம்புகேஸ்வர் நகர், கே.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 2 ஆண்டாக மாநகராட்சி அதிகாரிகள் இந்த பூங்காவை முறையாக பாராமரிக்காததால், உடற்பயிற்சி சாதனங்கள், ஊஞ்சல்கள், சறுக்குப்பாதை, மின் விளக்குகள், நடைப்பாதை உள்ளிட்டவைகள் உடைந்து கிடக்கிறது. இதனால், நடைபயிற்சி செல்வோர் தடுமாறி விழும் நிலை உள்ளது.  உடற்பயிற்சி சாதனங்கள் உடைந்துள்ளதால் இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.

விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளதால் சிறுவர்கள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பூங்காவில் பெரும்பாலான மின் விளக்குகள் உடைந்துள்ளதால் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் சில்மிஷம் செய்வது, செயின் பறிப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பூங்காவில் கழிப்பறை வசதி இல்லாததால் முதியோர்கள், பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சிலர் பூங்காவை சுற்றி சிறுநீர் கழிப்பதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.

எனவே, பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்கு, நடைபாதை ஆகியவற்றை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் நலன் கருதி, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: