×

குமரி நடிகை கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

பூதப்பாண்டி, பிப்.22: குமரி நடிகை கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என்று அவரது தாயார் வலியுறுத்தியுள்ளார். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு கடந்த 13.11.2000 அன்று தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது மாயவர்மன்(18), யோகா(8) என இரு குழந்தைகள் உள்ளனர். சந்தியா சென்னையில் இருந்து தமிழ்சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். அவரது கணவர் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி சென்னையை அடுத்த பெருங்குடி பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக்கிடங்கில் சந்தியா துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கை, கால் மற்றும் உடல் பாகங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. ஆனால் உடலின் நடுப்பகுதி மற்றும் தலை ஆகிய பாகங்கள் கிடைக்கவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில் அவர் சந்தியாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி குப்பை கிடங்கில் வீசியதாக கூறினார். இதையடுத்து போலீசார் சந்தியாவின் தலை மற்றும் முக்கிய பாகங்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஞாலத்தில் சந்தியாவின் தாய் பிரசன்னகுமாரி கூறியதாவது:எனது மகளை கொலை செய்து 1 மாதம் ஆகியும் இதுவரை அவரது உடலின் முக்கிய பாகம் கிடைக்கவில்லை. போலீஸ் எப்படியாவது கொலை செய்யப்பட்ட எனது மகளின் உடலை கண்டுபிடித்து தரவேண்டும். எனது மகள் 7 துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அவரது கணவர் மட்டும் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும். எனவே உண்மையான குற்றவாளிகளை பிடிக்க இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.சந்தியாவுக்கு திருமணமாகி 19 வருடம் ஆகிறது. எனது மகள் அவரது கணவர் குறித்து இதுவரை எந்த குறையும் கூறியதில்லை. கடந்த 1 வருடமாகத்தான் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வீட்டில் முதல் மாடியில் சந்தியாவும் அவரது கணவரும் வசித்து வந்தனர். கீழ்தளத்தில் அவரது கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரி வசிக்கின்றனர். எனவே என்ன பிரச்னை என்பது அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். எனவே சந்தியாவின் மாமியார் மற்றும் உறவினர்களையும் விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரித்தால் தான் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.எனது மகளின் கை கால்கள் மட்டும்தான் கிடைத்துள்ளது. ஆனால் இதயம், சிறுநீரகம், மூளை, கல்லீரல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உள்ள உடல் பாகம் கிடைக்கவில்லை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலகிருஷ்ணன் சென்னையில் இருந்து வரும்போதொல்லாம் ஒரு சூட்கேஸ் கொண்டு வருவார். அதை யாரும் தொடவிடமாட்டார். சந்தியாவும் அதை தொடமுடியாது.அவருக்கு மனித உறுப்புகளை விற்கும் கும்பல்களுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனது மகளையும் கொன்று அவரது உறுப்புகளை விற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது மகள் மரணத்தில் உள்ள உண்மைகளை கண்டறிய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.
மேலும் சந்தியாவின் குழந்தைகளை இதுவரை எங்களிடம் காண்பிக்கவில்லை. அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். சந்தியாவின் ஞாபகார்த்தமாக நாங்கள் அவர்களை வளர்க்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...