நீலாங்கரை அருகே பரபரப்பு 1964ம் ஆண்டு நடுக்கடலில் மூழ்கிய கடற்படை விமானம் கண்டுபிடிப்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் தருண்ஸ்ரீ என்பவர், ஸ்கூபா டைவிங் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி மாலை, 4 ஸ்கூபா டைவர்களுடன்  சேர்ந்து நீலாங்கரை கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் ஆய்வு செய்தார். அவர்கள் கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்தில் ஆய்வு செய்தபோது விமான உதிரி பாகத்தை கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக அரவிந்த் தருண்ஸ்ரீ கூறியதாவது: கடந்த 1964ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கடற்படைக்கு சொந்தமான விமானம் நீலாங்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கியதை, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சந்துரு மூலம் அறிந்தேன். அந்த விமானத்தின் பாகத்தை உடைத்து எடுப்பதன் மூலம், மீன் பிடி வலைகள் அறுபடுவதை தடுக்க முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

ஆனால் பல்வேறு பணிகளால் இந்த விமானத்தை தேடும் பணியை தொடங்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் நான் உள்பட 4 பேர் ஸ்கூபா டைவிங் உபகரணங்களுடன் 30 மீன்பிடி படகுகளில் மீனவர்களுடன் சென்றோம். மீனவர்கள் அடையாளம் காட்டிய கடல்பகுதியில் இறங்கி, கடலின் தரைப்பரப்பை ஆராய்ந்தோம். 30 நிமிடங்கள் தேடிய பின், மூழ்கிய விமானத்தை கண்டறிந்தோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூழ்கியிருந்ததால், அது பாறை போல் மாறி பாசை படிந்து மீன் இனப்பெருக்கத்துக்கு பயன்பட்டுள்ளதை பார்த்தோம். அதில் சிக்கிய மீனவர்களின் வலைகளையும் பார்த்தோம். அதைத்தொடர்ந்து, கரைக்கு வந்து இதுதொடர்பாக கடலோர காவல்படை, மீன்வளத்துறை, கடற்படை, விமானப்படைக்கு தகவல் தெரிவித்தோம். இந்த விமானத்தை அப்படியே விட்டு விடுவதன் மூலம் மீன் இனப்பெருக்கத்துக்கு பெரிதும் பயன்படும்.  இதற்கு பெரிய அளவில் செலவு ஏதும் ஆகப்போவதில்லை. ஆனால் அதுதொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு  கூறினார்.

Related Stories: