×

பொதுத்தேர்வுகள் 1ம் தேதி துவக்கம் பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் மாணவர்கள் பயணிக்கலாம்

திருப்பூர், பிப்.20: திருப்பூரில், பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. பொதுத்தேர்வுகளில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்கள் பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் இலவசமாக பயணம் செய்யலாம் என கலெக்டர் நேற்று தெரிவித்தார்.  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும், பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தொடர்பான மாவட்ட அளவிலான மாவட்ட தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி  தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும், பிளஸ் 1 வரும் மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வினை திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 78 தேர்வு மையங்களில் 211 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11,082 மாணவர்களும், 13,505 மாணவிகளும் மொத்தம் 24,587 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 177 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 24,764 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வினை திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 78 தேர்வு மையங்களில் 203 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11,529 மாணவர்களும், 13,823 மாணவிகளும் மொத்தம் 25,352 மாணவர்களும் தனித்தேர்வர்களாக 371 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 25,723 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 92 தேர்வு மையங்களில் 348 பள்ளிகளில் பயிலும் 15,204 மாணவர்களும் 15,267 மாணவிகளும் மொத்தம் 30,471 மாணவர்களும் தனித்தேர்வர்களாக 957 மாணவ மாணவியர்கள் மொத்தம் 31,428 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர். மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வுக்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்காப்பகங்கள் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார்கள் பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது. இத்தேர்வுகளில்,மேல்நிலை பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 78 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவவர்களாக 89 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,621 ஆசிரியர்களும் நியமனம் செய்யபப்பட்டுள்ளனர். இடைநிலை பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 92 தலைமையாசிரியர்களும், துறை அலுலவர், கூடுதல் துறை அலுவலர்களாக 98 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1683 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வர்.
மேல்நிலை பொதுத் தேர்விற்காக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 150 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்படவுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக 200 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது. இணை இயக்குநர் தலைமையிலும் பறக்கும்படை அமைக்கப்படவுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வுகளைப் பார்வையிடும் அதிகாரிகள் பறக்கும் படையினர் தங்கள் குறிப்புகளை, ஆலோசனைகளைப் பதிவு செய்ய பதிவேடு ஒன்று வைக்கப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டியும் வைக்கப்படும். மேல்நிலைப் பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் பஸ்களில் பயணம் செய்யும் மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் அட்டை தம்முடன் எடுத்து வராவிட்டாலும், சீருடை அணிந்து வரும் மாணவ, மாணவியரை பஸ்சில் பயணம் செய்ய பஸ் நடத்துநர்கள் அனுமதிக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் கோட்ட மேலாளரை கேட்டுக் கொள்ளப்பட்டது. தனித்தேர்வு மையங்களுக்கு தேர்வெழுத வரும் மாணவ, மாணவியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஆழ்ந்த கவனத்துடன், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு நேரங்களில் மன அமைதியுடனும், தைரியத்துடனும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் சிறப்பாக தேர்வுகளை எழுதிட மாவட்ட தேர்வுக்குழு சார்பில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்