வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

சென்னை: வாலாஜாபாத் அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, 2 பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை ஏரிவாய் காமாட்சி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இதே பகுதியில், இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். இதைதொடர்ந்து ஆட்களை  வரவழைத்து வீடு கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று காலை அஸ்திவாரத்துக்காக பள்ளம் தோண்டினர். அப்போது, கடப்பாறை பாறையில் இடிப்பது போன்ற சத்தம் கேட்டது. இதனால், அந்த இடத்தை முழுவதுமாக தோண்டியபோது, கருங்கற்களால்  செய்யப்பட்ட பழமை வாய்ந்த 4 அடி பெருமாள் சிலையும், 3 அடி உயரம் கொண்ட தாயார் சிலையும் இருந்தது தெரிந்தது. இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வாலாஜாபாத்  தாசில்தார் கிரிராணி சம்பவ இடத்துக்கு சென்று, 2 சிலைகளையும் கைப்பற்றி காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இந்த சிலைகள் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது, எப்படி இங்கே வந்தது என தொல்லியல்  துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

Related Stories: