மாநகர பஸ் கண்டக்டரை கொல்ல முயன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது

அம்பத்தூர்:  சென்னை அண்ணா சாலையில் இருந்து ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதிக்கு மாநகர பேருந்து (தடம் எண் 27 எச்) கடந்த 13ம் தேதி மாலை புறப்பட்டது. முருகன் (42) என்ற டிரைவர் பஸ்சை ஓட்டி வந்தார்.  கண்டக்டராக பால்வர்ணன் (51) பணியாற்றினார். இந்த பேருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, சி.டி.எச் சாலையில் வந்தபோது பேருந்தை பின் தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த 4 இளைஞர்கள், பேருந்தை நிறுத்தும்படி சத்தம் போட்டு தகராறு செய்துள்ளனர்.  ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த அரிவாளை எழுந்து பால்வர்ணன் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை வெட்டினான். இதில்,  கண்ணாடி உடைந்து  கத்தி பேருந்துக்குள் விழுந்தது.

பின்னர் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். இதனையடுத்து, டிரைவர் முருகன், கண்டக்டர் பால்வண்ணன் ஆகியோர் இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர்  விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த பேருந்தில் மாநில கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் தகராறு செய்வதற்காக பஸ்ஸை வழிமறித்து நிறுத்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். டிரைவர் பேருந்தை நிறுத்தாததால்  கண்டக்டரை கத்தியால் வெட்ட முயன்றது தெரியவந்தது.இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆவடி அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த சிவபாரதி (20), சரவணன் (20), கோபி (19), திருவள்ளூரை சேர்ந்த யுவராஜ் (20) ஆகியோரை நேற்று மாலை போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: