ஆட்டோக்களை சாலையின் ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி, பிப். 15:     கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை பகுதியில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.  கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியா முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் டிஎஸ்பி ராமநாதன் பேசுகையில், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆட்டோக்களை சாலையின் ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. அனைத்து ஓட்டுநர்களும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சீருடை அணிந்து ஆட்டோக்களை இயக்க வேண்டும். அதிகப்படியான ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது என்றார். கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் செல்வம், நிர்வாகி சர்தார் மற்றும் கச்சேரி சாலை, அண்ணா நகர், ராஜா நகர், மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.


× RELATED நாகையில் உரிமம் இன்றி இயங்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல்