×

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

திருக்கோவிலூர், பிப். 15: பழைய மற்றும் புதிதாக விடப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர்களை ஓட்டி அதிக கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள், கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பேருந்து கட்டணம் பயண தூரம் அடிப்படையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயண தூரம் அடிப்படையில் கணக்கீட்டு முறையாக இந்த கட்டண உயர்வை கடைப்பிக்காமல் சில பகுதிகளுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களிடம் வசூல் செய்து வருகின்றனர்.குறிப்பாக அரசு பேருந்துகளில்,  நகர பேருந்து முதல் அருகில் இருக்கும் பெரு நகரங்கள், வெகு தொலைவில் உள்ள நகரங்கள், வெளி மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளில் எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பெயர்களை வைத்துக்கொண்டு செல்லும் பேருந்துகளில் கடந்த ஒருவார காலமாக இந்த கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

பொதுவாக எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் போன்ற பெயர்களை தாங்கிக்கொண்டு செல்லும் பேருந்துகள் வழியோர உணவகங்களில் நிறுத்தக்கூடாது. அதேபோல் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் இயக்கப்பட வேண்டும். மேலும் குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் மட்டுமே பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை போக்குவரத்து கழகம் கடைப்பிடிக்காமல் சாதாரண பேருந்தை இயக்குவது போல், அதே பயண நேரத்தையே கடைப்பிடிக்கின்றனர். எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என கூறிக்கொண்டு அனைத்து நிறுத்தத்திலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தையும் மாற்றி பேருந்துகளை இயக்கி வருகின்றனர். கூடுதல் கட்டணத்தால் ஏழை, எளிய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் போன்ற பேருந்துகளில் சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு சொகுசான பயணம் மேற்கொள்ளலாம் என்று இருக்கும் பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழித்தடம், பயண தூரம் பேருந்தின் தரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : passengers ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்