பெரியகுளத்தில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி மந்தம்

பெரியகுளம், பிப்.14: பெரியகுளம் நகராட்சி பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் சிறு சந்துகளில் பேவர்பிளாக் கற்கள் அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் கற்கள் பதிக்கவில்லை. இதனால் அப்பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் வடகரை 3வது வார்டு பகுதியில் உள்ள தெற்கு பூந்தோட்ட தெருவில் கற்கள் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது.
இந்த தெருவில் குறிப்பிட்ட தூரம் வரை கற்கள் பதித்துவிட்டு 20 மீட்டர் அளவிற்கு கற்கள் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த இடம் மட்டும் பள்ளமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் அவ்வப்போது தெருவிளக்கும் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் கீழே விழுந்து விடுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். அங்கு பதிக்கப்பட்ட கற்களும் சீராக பதிக்கப்படவில்லை என்றும் புகார் கூறினர். அதே பகுதியில் பாதாளச்சாக்கடை இணைப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாக்கடையில் வருவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றும் தெரிவித்தனர். எனவே, நகராட்சி நிர்வாகம் கற்கள் அமைக்கும் பணியை முடிக்கவும், துர்நாற்றத்தை போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED பள்ளிப்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம்