×

70 லட்சம் ரூபாய் வீட்டை அபகரிக்க முயற்சி

ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சுசீலா. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் இறந்து போன நிலையில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  சுசீலா நேற்று எஸ்பி சக்திகணேசனிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், நான் டெய்லரிங் தொழில் செய்து அதன்மூலம் வரும் வருமானத்தில் எனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறேன். நான் குடியிருந்து வரும் வீட்டை கடந்த 2012ம் ஆண்டு சத்தி கனரா வங்கியில் 7 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தேன். மீண்டும் அதே வங்கியில் 3 லட்சம் ரூபாய் டெய்லரிங் கடன் பெற்றேன். கடனை சிறிது சிறிதாக திருப்பி செலுத்தி வந்த நிலையில் சத்தியமங்கலத்தை  சேர்ந்த ராஜேந்திரன், ரவி, ஜவஹர் ஆகியோர் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினர். அப்போது நான் 10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. வீட்டை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாய் பணம் கேட்டேன்.

பின்னர் வங்கியில் பணம் கொடுத்து பத்திரைத்தை மீட்டு இவர்களிடம் கொடுத்து 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். 17 மாதம் வட்டி செலுத்தி வந்த நிலையில் திடீரென வட்டியை அதிகரித்து கேட்டனர். நான் தர மறுத்ததால் அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்து தகாத முறையில் நடந்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் தட்டி கேட்டபோது  ரவி, ஜவஹர் இருவரும் வட்டியும், அசலையும் திருப்பி செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்தனர். இதுதொடர்பாக நான் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எனது வீட்டின் மதிப்பு 70 லட்சம். இந்த வீட்டை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொண்டு என்னை மிரட்டி வருகின்றனர்.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்